பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் - இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு.!
Seithipunal Tamil July 27, 2024 08:48 PM

தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான 'விக்சித் பாரத் 2047' திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டியதையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அவரை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாசலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு உள்ளிட்டோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பேன்" என தெரிவித்தார்.

இதேபோல், அருணாசலபிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் துணை முதலமைச்சர் சவுனா மெய்ன் உள்ளிட்டோர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.