`பணத்தை மீட்கணும்' - தூத்துக்குடி எஸ்.பி-க்கு ஆர்டர் போட்ட போலி பெண் ஐஏஎஸ் - சிக்கியது எப்படி?!
Vikatan September 21, 2024 12:48 AM

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாமில் பண மோசடி குறித்து புகார் அளிக்கச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த போலி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியை, தூத்துக்குடி போலீஸார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 18.09.2024 அன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானைச் சந்தித்து மனு அளித்து வந்தனர்.

அப்போது, திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி (44) என்பவர், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆல்வின் ஜெபஸ்டின் என்பவர், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவின் விசிட்டர் ஸ்லிப்பில் மங்கையர்கரசி ஐ.ஏ.எஸ் எனவும், உத்தரப்பிரதேச மாநில கல்வித்துறையில் உதவி செயலராக பணிபுரிவதாகவும் பதிவு செய்திருந்துள்ளார்.

தூத்துக்குடி

இது குறித்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், மங்கையர்கரசியிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல் கண்காணிப்பாளர் ஆர்பர்ட் ஜானிடமும் ரூ.10 லட்சம் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஆர்டர் போட்டுள்ளார், மங்கையர்கரசி.

அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையை கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும், புகார் மனு குறித்த விவரங்களும் அவருக்குத் தெரியவில்லையாம். இதையடுத்து, இது குறித்து விவரங்கள் யாருக்குத் தெரியும் என போலீஸார் கேட்டபோது, வெளியில் காரில் அமர்ந்திருக்கும் தனது கணவருக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வெளியில் காரில் காத்திருந்த திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் ரூபிநாத் (42) என்வரை போலீஸார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவரும் மங்கையர்கரசி ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் எனவும், ஆனால் தான் அவரின் கணவர் அல்ல என்றும், இருவரும் சேர்ந்து வசித்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் இருவரிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில், மங்கையர்கரசி ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என்பதும், தனது மனுவினை போலீஸார், தனக்குச் சாதகமாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி எனத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆப்பிள் செல்போனில் மத்திய அரசுத் தேர்வாணயத்தின் முன் நின்று எடுத்த புகைப்படங்களையும் போலீஸாரிடம் காட்டியுள்ளார்.

மேலும் விசாரணையில், மங்கையர்கரசி இதுபோல போலியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அதிகாரிகள் பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மங்கையர்கரசி தனது நண்பரான ரூபிநாத்துக்கு துப்பாக்கி லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு வந்த திருநெல்வேலி கிராம நிர்வாக அலுவலர் பொன்முத்து என்பவரையும் கடந்த 16.09.2024 அன்று தனக்குச் சாதகமாக செயல்பட வலியுறுத்தி, பணி செய்ய விடாமல் மிரட்டியதும் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவரான மங்கையர்கரசி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து நெல்லை மாவட்டத்துக்கு வந்ததும், இங்கு தனியார் கல்லூரியில் சில காலம் பேராசிரியையாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது நண்பரான ரூபிநாத், தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வருவதும், அவர் பா.ஜ.க நிர்வாகியாகச் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

மங்கையர்கரசியும், ரூபிநாத்தும் இணைந்து அரசு ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்து, பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தெரிய வந்ததையடுத்து, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரின் புகாரின்பேரில், இருவரையும் தூத்துக்குடி சிப்காட் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பிரிவு 204, 217 இன் கீழ் கைதுசெய்தனர்.

கைது

மேலும், மங்கையர்கரசி வந்த கார், அவரின் Union Public Service Commission முன்பு புகைப்படம் எடுத்து வைத்திருந்த ஆப்பிள் செல்போன் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி பலரை ஏமாற்றியதும், அண்டை மாவட்டமான தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் மோசடியில் ஈடுபட்டபோது பிடிபட்டதும் இரு மாவட்ட போலீஸாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

”கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” - சொல்கிறார் திருமாவளவன்!
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.