"விவசாயிகளுக்கு இருக்கும் 3 முக்கிய சவால்கள்" பாயிண்டை பிடித்த குடியரசு தலைவர் முர்மு!
சுதர்சன் September 21, 2024 06:14 PM

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய இடைநிலை வேளாண்மை நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதைத் தவிர, 21-ம் நூற்றாண்டில் விவசாயத்தின் முன் மேலும் மூன்று முக்கிய சவால்கள் உள்ளன என்றார். இது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்தை பராமரித்தல் ஆகும் என அவர் கூறினார்.

இடை நிலை விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும் என்று அவர் கூறினார். இந்தியாவில் அரக்கினை பழங்குடியின சமூகத்தினர்தான் அதிகமாக உற்பத்தி செய்கின்றனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

இது அவர்களின் வருமானத்திற்கு ஒரு முக்கிய ஆதாரமாகும் என அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அரக்கின் வரலாறு பழமையானது என்று கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் அரக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த்தாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். 
பாரம்பரிய விவசாயத்துடன் மற்ற விவசாயத்தையும் நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று அமைச்சர் கூறினார். வேளாண் காடுகள் அதாவது மரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அனைத்து அம்சங்களையும் நாம் சிந்தித்தால், அரக்கு விவசாயம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். 400 கோடி ரூபாய் மதிப்பில் அரக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார். எனவே நமது வருமானத்தை அதிகரிக்க அரக்கு முக்கியமானது என அவர் தெரிவித்தார். 

அரக்கு உற்பத்தி வனத்துறையின் கீழ் வருகிறது என்று கூறிய மத்திய அமைச்சர் சௌகான், எனவே அரக்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள் வேளாண் துறையின் திட்டங்களின் பலனைப் பெறுவதில்லை என்று கூறினார். நாடு முழுவதும் அரக்கு ஒரு விவசாய பொருளாக அங்கீகரிக்கப்பட முயற்சி எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பதப்படுத்தும் பணிகளை எளிமையாகி, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், அரக்கு அலகுகளை அமைப்பதில் அரசு கவனம் செலுத்தும் என்றும் சிவராஜ் சிங் சௌகான் கூறினார். பழங்குடியினர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) நிர்ணயிக்க முயற்சி எடுக்கப்படும்  என்று அவர் உறுதியளித்தார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.