"இந்த துயரம் மாற்றமா மாறும்" பணிச்சுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி!
சுதர்சன் September 22, 2024 12:14 AM

பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண் அன்னா செபாஸ்டியனின் பெற்றோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவரின் மரணத்தை தொடர்ந்து, அவர் பணிபுரிந்து வந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்னா செபாஸ்டியன் சமீபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், இந்த துயரம் மாற்றத்திற்கான உந்துகோலாக அமையும் என அன்னா செபாஸ்டியனின் பெற்றோரிடம் ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "அன்னா செபாஸ்டியனின் மனம் உடைந்த பெற்றோருடன் நான் பேசினேன்.

பிரகாசமான, லட்சியம் மிக்க இளம் தொழில் வல்லுநரின் வாழ்க்கையை நச்சு வாய்ந்த, மன்னிக்க முடியாத பணிச்சூழல்கள் பறித்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத துக்கமான நேரத்தில் கூட, அன்னாவின் தாயார் குறிப்பிடத்தக்க துணிச்சலையும் தன்னலமற்ற தன்மையையும் வெளிப்படுத்தினார்.

தன்னுடைய தனிப்பட்ட இழப்பை கூட அனைவருக்குமான பாதுகாப்பான, நியாயமான பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக மாற்றியுள்ளார். இந்த துயரம், மாற்றத்திற்கான உந்துகோலாக அமைவதற்கு காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவுடன் எனது தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் அன்னாவின் குடும்பத்திற்கு நான் உறுதியளித்துள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

இன்றைய உலகில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, வேலை அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகிவிட்டது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.