``வீட்டை விற்றுவிட்டேன்; படத்தை வெளியிட தணிக்கை குழு முடிவெடுக்க வேண்டும்" கங்கனா ரனாவத்
Vikatan September 22, 2024 06:48 AM
பா.ஜ.க எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மைய கதாபாத்திரமாக வைத்து `எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.

இப்படத்தை ஜீ டிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார். ஆனால் படம் இப்போது மத்திய தணிக்கை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆரம்பத்தில் இப்படத்தை கடந்த 6ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. படத்தில் சீக்கியர்களுக்கு எதிரான சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி சில பகுதிகளை நீக்கவேண்டும் என்று தணிக்கை குழு கேட்டுக்கொண்டது. அதோடு சீக்கிய அமைப்புகளும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சர்ச்சைகளால் தணிக்கை குழு எமர்ஜென்சி படத்திற்கு சான்று கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் படத்தை வெளியிட எந்தவித உத்தரவு கிடைக்கவில்லை.

படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கங்கனாவிற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை சரி செய்ய சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சொந்த வீட்டை கங்கனா ரனாவத் விற்பனை செய்தார் எனவும் கங்கனா தரப்பில் சொல்லப்பட்டது. படத்திற்காக தனது வீட்டை விற்பனை செய்தது குறித்து கங்கனா ரனாவத்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எமர்ஜென்சி படம் வெளியானால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதி படத்தை வெளியிட மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்சார்டு போர்டு இவ்விவகாரத்தில் முடிவு எடுக்காமல் இருப்பது குறித்து கங்கனா ரனாவத் மிகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,''நான் எமர்ஜென்சி படத்தை தயாரித்ததில் பாலிவுட்டில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மற்ற தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளேன். படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் அனைவருக்கும் இழப்பு ஏற்படுகிறது. எனவே படத்தை வெளியிடுவது குறித்து தணிக்கை குழு முடிவு எடுக்கவேண்டும். இவ்விவகாரத்தில் பாலிவுட் அமைதி காப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது''என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டியிலும் இவ்விவகாரத்தில் பாலிவுட் தனக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கடுமையாக சாடியிருந்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.