`துண்டாடும் கும்பல்; நகர நக்சலைட்கள்...' - காங்கிரஸை சரமாரியாகச் சாடிய பிரதமர் நரேந்திர மோடி
Vikatan September 22, 2024 06:48 AM

மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இப்போதே தொடங்கிவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் விஷ்வகர்மா யோஜனா திட்டத்தின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ''காங்கிரஸ் கட்சி நகர நக்சலைட்களால் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் ஒரு துண்டாடும் கும்பல், இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. ஊழல் அரச குடும்பத்தால் நடத்தப்படும் மிகவும் அதிக ஊழல் நிறைந்தது காங்கிரஸ் கட்சி. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விநாயகர் பூஜையை வெறுக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நான் சென்றதைக்கூட காங்கிரஸ் எதிர்க்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்களை கைதுசெய்தனர். விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டது. சுதந்திர போராட்டத்தின்போது லோக்மான்ய திலகர் கூட்டத்தை கூட்டுவதற்காக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினார். அந்த பாரம்பர்யத்தை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடப்பார்க்கிறது. மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக்கொண்டிருந்த போது, கர்நாடகாவில் விநாயகர் சிலைகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த நாடே காயம் அடைந்துள்ளது.

பிரதமர் மோடி

ஆனால் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமைதி காக்கின்றன. இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராகப் பேசி இந்தியாவின் பாரம்பர்ய கலாசாரத்திற்கு சிலர் (ராகுல் காந்தி) களங்கம் விளைவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் முந்தைய மகாவிகாஷ் அகாடி அரசு விவசாயிகளை கடனில் தள்ளிவிட்டது'' என்று குற்றம்சாட்டினார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்!' - தமிழிசை
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.