உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முட்புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தனர். அங்கு பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்டனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் அதிகாரி புஷ்பேந்திர சிங் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அதன் நிலைமை சீராகப்பட்டது. ஆனால், குழந்தையின் பெற்றோர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. குழந்தையை ஏற்க முன்வருபவர்களும் இல்லை.
இதனையடுத்து, புஷ்பேந்திர சிங் மற்றும் அவரது மனைவி ராஷி இருவரும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். இவர்களுக்கு 2018ம் ஆண்டு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் பிறக்கவில்லை. இந்த ஏக்கம் தொடர்ந்தபடியே இருந்ததால் இந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். நவராத்திரி பண்டிகையின் போது அம்பிகையே அவர்களுக்கு குழந்தையை அருளியதாக இருவரும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.