"திமுக-விற்கு சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ உரிமை இல்லை!" - ராமதாஸ்
Vikatan October 20, 2024 06:48 PM
கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், " தமிழ்நாட்டில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் பலர் பணி நிலைப்பு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதாகவும், அதனால், அவர்கள் ஒரு மாதம் பணியாற்றினால், அடுத்த மாதம் பணி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. சமூக நீதிக்கும், மனித நேயத்திற்கும் எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது. டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், ‘வட்டார அளவில் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்கள் பணிநிலைப்பு வழங்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடருவதால் ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்களைத் தவிர்த்து புதிய பணியாளர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டிருப்பதாகவும், அதன்படி டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. களப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு மேல் பணிகள் தொடர அனுமதிக்க கூடாது. இப்பணியாளர்கள் தினமும் 8 மணி நேரம் பணி செய்ய பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே தினக்கூலி அனுமதிக்கப்பட வேண்டும். பணியாளர் விடுப்பு எடுத்தால் தினக்கூலி வழங்கக் கூடாது.

மஸ்தூர் பணியாளர்கள் பணி நிரந்தரம், பணி மூப்பு போன்ற உரிமைகள் கோர இயலாது” என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவை தொழிலாளர்களின் நலனுக்கும், சட்டங்களுக்கும் எதிரானவை. ஒரு பணியாளர் குறைந்தபட்சம் 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிரந்தரப்பணி என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதை வழங்க மறுக்கும் தமிழக அரசு, பணியாளர்கள் பணி நிலைப்பு கோருவதால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் பணி வழங்கக் கூடாது என்பது தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பார்க்கும் எஜமானர் மனநிலையையே காட்டுகிறது.

ஸ்டாலின்

சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, எவ்வளவு மோசமான சமூகநீதி படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், பத்தாண்டுகள் பணி செய்த தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிரந்தரப்பணி கேட்பார்கள் என்பதற்காகவே கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது எத்தகைய மனநிலை? இதுதான் திமுக கண்டுபிடித்திருக்கும் புதிய சமூக நீதியா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கவேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை அரசுத்துறைகளில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் என தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 நபர்களுக்கு அரசு துறைகளில் நேரடி பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. இவை மட்டும் தான் நிரந்தரப் பணிகள் ஆகும். உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்காலிக, குத்தகை முறை பணியாளர்கள் ஆவர். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசுக்கு சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ எந்த உரிமையும் இல்லை.

ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசுப் பணியாளர்களை ஒடுக்குவது, தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நிர்ணயம் செய்வது என தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, இனியாவது அதன் அநீதிகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதுடன், பத்தாண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.