Thangalaan : தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடையில்லை...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ராகேஷ் தாரா October 21, 2024 06:14 PM

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தங்கலான் திரைப்படம் அது பேசிய கதைக்களம் மற்றும் அரசியலுக்காகவே விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. வரலாறு, மாய எதார்த்தம் என ஒரு புதிய முயற்சியாக தங்கலான் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். இந்த மாதிரியான கதைக்களம் தமிழ் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கே புதிது. அந்த வகையில் இந்த முயற்சிக்காகவே ரஞ்சித்தை பலர் பாராட்டி வருகிறார்கள். 

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து அடுத்த மாதமே இந்தியிலும் வெளியாகியது. எதிர்பார்க்காத விதமாக தங்கலான் படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. படத்தை திரையரங்கில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாக ஆவலாக காத்திருக்கிறார்கள்.

தங்கலான் படத்தை வெளியிட தடையில்லை

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருந்த தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனால் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி பொற்கொடி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என இந்த வழக்கை தள்ளுபதி செய்துள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்று படம் திரையரங்கில் வெளியானப்பின் படத்தை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.