"யுகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த இந்தியா" பிரதமர் மோடி பெருமிதம்!
சுதர்சன் October 21, 2024 06:44 PM

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "சமீபத்திய சவால்களான கொரோனா பெருந்தொற்று, கொரோனா பாதிப்புக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை, பருவநிலை மாற்றம், நீடித்து வரும் போர்கள்,  விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அப்பாவி மக்கள் உயிரிழப்பு, புவி அரசியல் சார்ந்த பதற்றங்கள் மற்றும் மோதல்கள் உள்ளிட்டவை அனைத்து உலகளாவிய உச்சி மாநாடுகளிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தியாவில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இணையாக, இந்தியா தனக்கான நூற்றாண்டு என்பதை வெளிப்படுத்தி வருகிறது" என்றார்.

“உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த யுகத்தில் இந்தியா, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது. உலகம் கவலையில் ஆழ்ந்திருந்த போது இந்தியா நம்பிக்கையைப் பரப்பியது” என பிரதமர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சூழல் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் காரணமாக இந்தியா பாதிக்கப்பட்டாலும், நேர்மறை உணர்வுடன் பணியாற்றுவதை காணமுடிகிறது என்றும் அவர் கூறினார். மனித வரலாற்றில் 21 ஆம் நுாற்றாண்டு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாக கருதப்படுகிறது என்று தெரிவித்த மோடி, நிலைத்தன்மை, தீர்வுகள் ஆகியவற்றை  பராமரிப்பது, இன்றைய யுகத்தின் அவசர தேவை என்று கூறினார். 

மனிதநேயத்திற்கான சிறப்பான எதிர்காலத்திற்கு இந்த அம்சங்கள் அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், இதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவை எடுத்துக்காட்டிய அவர், தொடர்ச்சியாக 3 வது முறையாக அரசை வழிநடத்திச் செல்ல அவர்கள் வாய்ப்பு வழங்கியிருப்பதாகவும், 60 ஆண்டுகளில் முதன் முறையாக நிலைத்தன்மை அவசியம் என்ற வலுவான செய்தியை மக்கள் வழங்கியுள்ளதாகவும் கூறினார். 

பருவநிலை மாற்றம் என்னும் உலக நெருக்கடிப் பற்றி பேசிய பிரதமர், மனித குலம் முழுவதும் எதிர்கொள்ளும்  சிக்கல் இது என்று தெரிவித்தார். பருவநிலை மாற்ற சவாலில் இந்தியாவின் குறைந்த அளவிலான பங்களிப்பு இருந்த போதிலும், அதனை எதிர்கொள்வதில் நாடு முன்னணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

வளர்ச்சியின் முக்கிய அம்சமாக பசுமை மாற்றத்தை அரசு  உருவாக்கி இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சி திட்டமிடுதலில் நிலைத்தன்மை முக்கிய அம்சம் என்று விளக்கினார். பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், வேளாண்மைக்கான சூரிய சக்தி பம்ப் திட்டங்கள், மின்சார வாகனப் புரட்சி, எத்தனால் கலவைத்திட்டம், மிகப்பெருமளவிலான காற்றாலை சக்தி பண்ணைகள், எல்இடி விளக்கு இயக்கம், சூரிய சக்தியால் இயக்கப்படும் விமான நிலையங்கள், உயிரி எரிவாயு நிலையங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளை அவர் வழங்கினார். 

இந்த ஒவ்வொரு திட்டமும் பசுமை எதிர்காலம், பசுமை வேலைகளுக்கான வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.