Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்த Glutathione மாத்திரையும் ஊசியும் உதவுமா?
Vikatan October 21, 2024 09:48 PM

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்தவும், கருமையைப் போக்கவும் குளுட்டோதயான் என்ற மாத்திரை உதவும் என்று ஒரு செய்தியில் படித்தேன். நான் மாநிறமாக இருப்பேன். எனக்கு இந்த மாத்திரை உதவுமா... எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா


"நிறத்திற்கும் அழகிற்கும் தொடர்பில்லை. எந்த நிறமாக இருந்தாலும், அதன் ஆரோக்கியத்தைதான் நாம் மேம்படுத்த வேண்டும். இப்போது கேள்விக்குப் போவோம். நீங்கள் படித்த தகவல் உண்மைதான். குளுட்டோதயான் (Glutathione) என்பது ஒருவகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்.  எக்கச்சக்கமான நல்ல தன்மைகளைக் கொண்டது இது.

ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்பவை, செல்களின் டி.என்.ஏ, புரதங்கள் மற்றும் கொழுப்புகளைச் சேதப்படுத்தி, செல் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை. முதுமைத் தோற்றத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

அந்த வகையில் ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்பது குரங்கு போன்றது என்று சொல்லலாம். செல்களை எல்லாம் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். இந்தக் குரங்கை அடக்கி வைப்பதற்கு உதவுபவைதான் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ். 

Skin Care

குளுட்டோதயானில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன. இவை ஸ்ட்ரெஸ் அளவைக் குறைக்கும். செல்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கை குறைக்கும். அதன் விளைவாகச் சரும நிறம் மேம்படும். உடலின் வேறு இடங்களில் காயம்பட்டதால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். இப்படி குளுட்டோதயானின் பல சிறப்புகளில் ஒன்றுதான் சரும நிறத்தை மாற்றும் தன்மை.

குளுட்டோதயானை மாத்திரையாகவோ, ஊசி வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையோடு மாத்திரைகளாகத் தொடர்ந்து 6 முதல் 8 மாதங்களுக்கு எடுக்கும்போது சருமத்தில் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். ஊசியாக எடுப்பதானால் வாரம் ஒருமுறை குறிப்பிட்ட டோஸேஜில் எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவரிடம்தான் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரை அல்லது ஊசியை எத்தனை நாள்களுக்கு எடுக்கிறோமோ, அதுவரை சருமம் ஆரோக்கியமாக, பளபளப்பாக இருக்கும். அதை நிறுத்தும்போது அந்தப் பளபளப்பு தானாகக் குறையத் தொடங்கும். நிரந்தர மாற்றமெல்லாம் சாத்தியமில்லை. சத்து மாத்திரைகள் எடுப்பதுபோன்றதுதான் இதுவும்.

skin glow

எனவே, உங்களுடைய தேவை அறிந்துதான் குளுட்டோதயான் எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, திருமணம் ஆகப் போகிறது, விடுமுறைக்கு வெளியூரோ, வெளிநாடோ போகிறீர்கள், ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இதை எடுத்துக்கொள்ளலாம். காரணம் எதுவானாலும் மருத்துவ ஆலோசனையோடு அவர் பரிந்துரைக்கும் டோஸ் மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவமாக எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை அவசியம்."

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.