``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்
Vikatan October 22, 2024 12:48 AM

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கரூர் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்திக்க வெண்ணைமலையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நடந்து செல்ல முயன்றனர். அப்போது, நடந்து சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, தனியார் விடுதியில் தங்கியிருந்த சீமான் வெளியே வந்து பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடி நிலப்பிரச்னை தொடர்பான அறநிலையத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து பேசினார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,

மக்களைச் சந்தித்த சீமான்

"சமூகநீதி பேசும் தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன் கோவி செழியனுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் தரவில்லை? திராவிடம் என்ற வார்த்தை இருந்ததால்தான் அந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக கருணாநிதி அறிவித்தார். கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? பிறப்பினால் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியுமென்றால் அதுதான் மிகப்பெரிய சனாதனம். நான் களத்தில் வேகமாக ஓடுபவன். விஜய் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பவர். மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் பொழுது மந்திரி சபையில் இடம் கேட்கும் தி.மு.க, மாநிலத்தில் கூட்டணி மந்திரி சபை அமைக்க பயப்படுகிறது. 20 மாநிலங்களில் உள்ள முதல்வர்களை சந்திக்காத பிரதமர், தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் அடிக்கடி சந்திக்கிறார். தி.மு.க-வுடன், பா.ஜ.க நெருக்கத்தில்தான் உள்ளது. த.வெ.க மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் வர வேண்டாம் என விஜய் கூறியது அக்கறையில் சொன்னது. அதை வரவேற்கிறேன். விஜய்க்கு என் பாராட்டுகள். டாஸ்மாக் கடைகளில் 3,500 கவுன்டர்கள் புதிதாக திறக்கப்படும் என வெளியான செய்தியையடுத்து, பா.ம.க தலைவர் அன்புமணி அதற்கு கண்டனங்களை தெரிவித்தார். அதை திசை திருப்புவதற்காக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து பிரச்னையை எழுப்பினார்கள்" என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.