Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில் விபரீதம்
குலசேகரன் முனிரத்தினம் October 22, 2024 10:44 AM

Food Poisonning: பெங்களூருவில் பிறந்தநாள் கேக் உட்கொண்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு:

பெங்களூரைச் சேர்ந்த தீரஜ் என்ற ஐந்து வயது சிறுவன், பழைய உணவை உட்கொண்டதால், உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே உணவை உண்ட அவனது பெற்றோர் பாலராஜ் மற்றும் நாகலட்சுமி ஆகியோர், மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவமானது கே.பி.அக்ரஹார பகுதியில் நடைபெற்றுள்ளது.

நடந்தது என்ன?

உணவு டெலிவெரி வேலை செய்து வரும் பாலராஜ், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒன்றாக உணவை அருந்தியுள்ளார். தொடர்ந்து நேற்று காலையில் அவர்கள் எழும்போது, கடுமையான வலியால் அவதிப்பட்டு அக்கம்பத்தினரை உதவிக்காக நாடியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில், தீரஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர் சுயநினைவின்றி ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவர்களது மகள் தனது பாட்டி வீட்டில் இருந்ததால், இந்த ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

விஷமான பிறந்தநாள் கேக்?

முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தினர் தங்கள் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருந்த பழைய உணவை உட்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக தயாரிக்கப்பட்டு, குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்டு இருந்த கேக் விஷமாக மாறியிருக்கலாம் என வலுவான சந்தேகங்கள் நிலவுகின்றன. டெலிவரிக்கான கேக் ஆர்டரை பாலராஜ் பெற்றிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அதை வாடிக்கையாளர் ரத்து செய்ததால்,  அந்த கேக்கை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துள்ளார். தொடர்ந்து,  ஞாயிற்றுக்கிழமை இரவு, குடும்பத்தினர் இரவு உணவோடு கேக்கைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் தான், குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை:

மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையில் தீரஜ் இறந்தது உணவில் விஷம் கலந்ததாலேயே என உறுதி செய்யப்பட்டது. குடும்பத்தினர் உட்கொண்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  விசாரணை நடைபெற்று வருவதாகவும், உணவு விஷமானதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேபி அக்ரஹாரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் சுயநினைவுக்கு திரும்பியவுடன் அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்தின் விளக்கம்:

இந்த சம்பவத்திற்கு, பாலராஜ் பணியாற்றி வரும் உணவு விநியோக தளமான ஸ்விக்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,  "பெங்களூருவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு எங்களது ஆதரவை வழங்குகிறோம். விசாரணையில் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம்” என விளக்கமளித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.