காரைத் தடுத்து நிறுத்திய காவலாளியை கொடூரமாக தாக்கிய பெண்கள்... 4 பேர் மீது வழக்குப்பதிவு!
Dinamaalai October 22, 2024 03:48 PM

 

 

மாமல்லபுரத்தில் தனியார் நிறுவன காவலாளி, நோ என்ட்ரி வழியே சென்ற காரைத் தடுத்து நிறுத்திய போது, காரில் இருந்த பெண்கள் காவலாளியைக் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காரில் வந்திருந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா சென்ற இடத்தில், ஐந்துரதம் அமைந்துள்ள பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நோ பார்க்கிங் வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்திய வாகன நிறுத்துமிட காவலரை, காரில் சென்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபமாக வன்முறை செயல்களும், குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலானவர்கள் தங்களது அதிகாரத் திமிரினாலும், செல்வாக்கு, பிரபலங்களின் அறிமுகங்களினாலும் இப்படி சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல் போலீசார் உட்பட பொதுஇடங்களில் வரம்புமீறியும் செயல்படுகின்றனர். சமீபத்தில் கடற்கரையில் ஒரு நடுத்தரவயதுள்ள ஆணும், பெண்ணும் போலீசாரை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு, காரை அவர் மீது ஏற்றுவது போல குடிபோதையில் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலான நிலையில், அடுத்த அதிர்ச்சியாக இந்த மாமல்லபுர வீடியோ வைரலாகி பதைபதைக்க வைக்கிறது. 

மாமல்லபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், ஐந்துரதம் அமைந்துள்ள பகுதியில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்டவர்கள் நோ பார்க்கிங் வழியாக காரை பார்க் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அங்கு பணியிலிருந்து தனியார் காவலர் ஏழுமலை என்பவர், ‘இது நோ பார்க்கிங் ஏரியா... தவிர நோ எண்ட்ரி வழியாக செல்லக் கூடாது என்று கார் பார்க்கிங் செய்யும் இடத்தைக் காட்டி, காரை வழி மறித்து நின்றுள்ளார். 

உடனே காருக்குள் இருவர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று நோ என்ட்ரி வழியா செல்ல முயன்றுள்ளனர். இதனால், காரை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளார் ஏழுமலை. இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் ஆவேசமடைந்து, சாலையின் நடுவே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், காரில் உடன் வந்த 2 ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து வாகன நிறுத்துமிட காவலரை கடுமையாக தாக்கினர். இதனால், பதிலுக்கு காவலரும் தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதையடுத்து, 4 பேரும் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். மேலும், தனியார் காவலரிடமிருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கி, அவரது சட்டையை கிழித்தனர்.

இந்த கை கலப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவ்வழியாக சாலையில் சென்ற நபர்கள் காரில் சுற்றுலா வந்து 4 பேரையும் சமாதானம் செய்து, காவலரையும் அவர்களிடம் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காரில் வந்த நபர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தை, அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமுக வலைதளத்தில் வைராலானது. 

இந்நிலையில், வீடியோ ஆதாரங்களை வைத்து தனியார் நிறுவன காவலரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார் என கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.