`காமராஜர் குறித்து சர்ச்சை கருத்து' - திமுக ராஜீவ் காந்திக்கு எதிராக கொதிக்கும் கதர்கள்!
Vikatan October 23, 2024 01:48 AM

சமீபத்தில் தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் நுால் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய அந்த கட்சியின் மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி, "ராஜாஜி மூடிய பள்ளிகளைதான் காமராஜர் திறந்தார். கல்வி கண் திறந்த காமராஜர், தன் சொந்த பணத்தில் பள்ளிகளை திறக்கவில்லை. காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டார். ஆனால் அத்தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இல்லை. காமராஜர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, எதிரும் புதிருமாக இருந்த அண்ணாதுரை, தி.மு.க-வை போட்டியிடாமல் செய்து, ஆதரவு அளித்தார்" என பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

காமராஜர்

தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, "நாம் தமிழர் கட்சியில் ராஜிவ் காந்தி இருந்தபோது, நாக்கில் நரம்பில்லாமல் கருணாநிதியை பற்றி பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு தி.மு.க-வில் தஞ்சம் புகுந்தார். அவருடைய பின்புலம் அறிந்தும் தி.மு.க-வில் முக்கியத்துவம் ஏன் என்பது புரியவில்லை. இத்தகைய மோசமான பின்னணி கொண்ட ஒருவர், காமராஜரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை" என கொதித்திருந்தார்.

இதேபோல் தலைவர்கள் பலரும் கடும் கண்டம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

செல்வப்பெருந்தகை

இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை செவுந்திரராஜனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பெருந்தலைவர் காமராஜர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்தார். அதற்காக அழகப்பன் கமிட்டி அமைத்து முழுவதுமாக ஆராய்ந்தார். 6000 மூடிய பள்ளிகள், 12000 புதிய பள்ளிகள், 500 மக்கள் தொகை கொண்ட கிராமம் தோறும் பள்ளிகள், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளிகள் ஆகியவற்றை திறந்தார். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். சொந்த காசிலா அவர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்று கேள்வி கேட்கிறீர்களே?. பெரியார் பெயரில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரியார் பல்கலைக்கழகம் போன்ற பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்பதை உங்கள் இனமான தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டிருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தி.மு.க-வினரின் இந்த ஆணவ பேச்சுகளால் பெருந்தலைவர் காமராஜரால் பலன் பெற்ற பலரது மனம் புண்பட்டு இருக்கிறது" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், "ராஜீவ் காந்தியின் தந்தை மிகவும் நல்லவர். எனவேதான் அவருக்கு ராஜீவ் காந்தி என்கிற பெயரை வைத்திருக்கிறார். ஆனால் அந்த பெயருக்கு இருக்கும் மரியாதையை கெடுக்கும் வகையில் ராஜீவ் காந்தி செயல்பட்டு வருகிறார். இதை பார்க்கும் போது முழு போதையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைக்கிறோம். ஆனாலும் காமராஜரை பற்றி பேசியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற ஆட்களை தி.மு.க அடக்கி வைக்க வேண்டும்.

ஜி.கே.முரளிதரன்

இல்லையென்றால் 2026 தேர்தலில் தி.மு.க மயானத்துக்கு செல்லும். ஆட்சி அழிந்துபோகும். ஆட்சியை பிடிப்பதற்கு காரணமாக இருந்த கூட்டணி கட்சிகளை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இதனால் அனைத்து கட்சிகளும் எதற்காக திமுக ஆட்சிக்கு வர நாம் உழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ராஜீவ் காந்தி போன்றவர்களின் பேச்சுக்களை பார்க்கும்போது நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்கிற பழமொழிதான் நியாபகம் வருகிறது. தி.மு.க நண்டு கொளுத்துப்போய் கிடக்கிறது. அது ராஜீவ் காந்தி போல வலையில் தங்காமல் வெளியில் வரும். பிறகு வேட்டையாடப்பட்டு உயிரிழக்கும். இதுதான் நடக்கப்போகிறது. ராஜீவ் காந்தி போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். இல்லையென்றால் சீரழித்து போவார்கள்" என கொதித்தார்.

இறுதியாக இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், "பிறர் மனம் வருத்தப்படும்படியான கருத்துக்களை ராஜீவ் காந்தி பேசமாட்டார். அவர் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் தவிர்க்கத்தக்கது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.