யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்!...டெல்லி முதலமைச்சர் அதிஷி பதிலடி!
Seithipunal Tamil October 24, 2024 03:48 AM

தலைநகர் டெல்லியில் உள்ள  காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆறு பாய்கிறது. இதற்கிடையே, நாளுக்கு நாள் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை  தீவிரமடைந்து வரும் நிலையில்,  காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள  யமுனை ஆற்றில், ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பனிப்படலம் போல் வெள்ளை நிறத்தில் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதற்கிடையே டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக,  பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி , டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காற்று மற்றும் யமுனை நதி மாசடைந்து உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த நிலையில் யமுனை நதிக்கரையில் ஆய்வு மேற்கொண்ட டெல்லி முதலமைச்சர் அதிஷி, பாஜக அரசின் மோசமான செயல்பாடே யமுனை நதி மாசு அடைந்ததற்கு காரணம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.