Zimbabwe: டி20 போட்டியில் 344 ரன்கள்; சூறையாட்டம் ஆடிய ஜிம்பாப்வே; உடைபட்ட ரெக்கார்டுகள்!
Vikatan October 24, 2024 04:48 AM
2026 டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் காம்பியா என்கிற அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 344 ரன்கள் அடித்து பழைய ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்திருக்கிறது.

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஆப்பிரிக்க பிராந்தியத்துக்கான தகுதிச்சுற்றுத் தொடரில் இன்று ஜிம்பாப்வே அணி காம்பியா என்கிற அணியை எதிர்கொண்டிருந்தது. நைரோபியில் நடந்த இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனான ராசாதான் டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

காம்பியா அணி அனுபவமற்ற அணி என்பதால் முதலில் இருந்தே ஜிம்பாப்வே அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஓப்பனர்களான ப்ரையன் பென்னட், மருமனி என இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்கினர். சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட இவர்களின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி பவர்ப்ளேயிலேயே 100 ரன்களை கடந்துவிட்டது. இருவருமே அரைசதத்தைக் கடந்து ஆட்டமிழந்தனர்.

நம்பர் 4 இல் கேப்டன் ராசா களமிறங்கினார். அவரும் எதோ பவுலிங் மெஷினின் பந்துகளை எதிர்கொள்வதைப் போல அத்தனை எளிதாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். மூஸா என்கிற ஒரு பௌலரின் ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் இரண்டு பவுண்டரிகளுடன் 35 ரன்களை சேர்த்துக் கொடுத்தார். 33 பந்துகளிலேயே சதத்தை எட்டிவிட்டார். இதன் மூலம் டெஸ்ட் ஆடும் நாடுகள் சார்பில் அதிக வேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் 35 பந்துகளில் சதமடித்திருந்த மில்லரின் சாதனையை ராசா முறியடித்தார். மொத்தமாக 43 பந்துகளில் 133 ரன்களை அடித்து ராசா கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார்.

Raza

ஜிம்பாப்வே அணி 344 ரன்களை எட்டியது. இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இதற்கு முன் அதிக ரன்கள் எடுத்திருந்த நேபாளத்தின் சாதனையை ஜிம்பாப்வே முறியடித்திருக்கிறது. நேபாள அணி மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்களை எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது.

345 ரன்களை விரட்டிய காம்பியா அணி 54 ரன்களில் ஆல் அவுட் ஆகிவிட்டது. ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.