பெங்களூருவில் கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு
Top Tamil News October 24, 2024 05:48 AM

பெங்களூருவில் கட்டுமானப் பணியிலிருந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8- ஆக உயர்ந்துள்ளது.  


பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.  இதில்  ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழைக்கு தாங்காமல் நேற்று (அக்.22) மாலை  இடிந்து விழுந்தது.  இதில் 7 தளங்களைக் கொண்ட அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும்,  அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.   


பெங்களூரு நகரில் தரமின்றி கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், மீட்பு பணி நடைபெற்று வரும் சம்பவ இடத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற முறையில் எந்த அனுமதியும் இல்லாமல் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகள் மீது சுயமாக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில் எந்த அனுமதியும் இன்றி இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்ததாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் லோக் ஆயுக்தா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அனைவரிடமும் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி பி.எஸ்.பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெங்களூருவில் கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 21 பேர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.