உயரப்போகும் கட்டணம்! இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு! வெளியான கண்டன அறிக்கை!
Seithipunal Tamil October 24, 2024 03:48 AM

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, பொதுமக்களுக்கு குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குவதை மத்திய அரசும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) உறுதி செய்ய வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சேனல் விலையை 19 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் அன்றாட நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பயன்படுத்தக் கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதால் பொதுமக்களுக்கான மாதாந்திர கேபிள் கட்டணமும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் கேபிள் டிவி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு, தொழிலை முற்றிலும் முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக கேபிள் டிவி சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, கேபிள் டிவி தொழிலை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த சேவை வழங்கும் நோக்கிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.