ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா?- 1800 4256 151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: சிவசங்கர்
Top Tamil News October 24, 2024 09:48 PM

தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் முன்பதிவு குறைந்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி ஏற்ற போது ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அதை நான் நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டேன்.அதன் பின்னர் அது சரி செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது  அதிக அளவில்  பேருந்துகளை பயன்படுத்துவர்கள் அவர்களுக்கு  சுமூகமான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

கடந்த ஆண்டுகளைப் போலவே கட்டண உயர்வு இல்லாமல் இந்த ஆண்டும் தீபாவளி பயணம் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செய்து வருகின்றன. ஆம்னி பேருந்துகளில் கட்டண அதிகம் என்ற புகார் வரும் பட்சத்தில் அரசு சார்பில் டோல் ஃப்ரீ எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் புகார் வரும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


வெளியூர் பயணத்தின் போதும் பயணம் முடிந்து சென்னைக்கு திரும்பும் பொழுதும் எந்த வித போக்குவரத்து பாதிப்பும் இல்லாமல் பயணிகளுக்கு எந்த சிரமமும் இன்றி வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பேருந்துகள்  கட்டணத்தை உயர்த்துவதாக எங்களுக்கு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்கள் அரசு பேருந்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் தனியார் பேருந்துகளை மிக குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து  மூன்று பேருந்து நிலையங்கள் ஆக இந்த ஆண்டு குறைத்துள்ளோம். மேலும் எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்த வழித்தடத்தின் வழியாக எந்த ஊருக்கு சென்றடைகின்றது என்பதை தனி பட்டியலின் மூலம் அரசு சார்பில் வெளியிட்டுள்ளோம்” என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.