சென்னை: வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் - சிக்கியது எப்படி?
Vikatan October 24, 2024 09:48 PM

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் ரகசிய தகவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்தப் பிரிவின் போலீஸார் கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் போதைப்பொருள் விற்கும் கும்பல் இருப்பது தெரியவந்தது.

போதைப்பொருள்

இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அங்கிருந்த ஏழு பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் 250 கிராம் எடையுள்ள போதைப்பொருள், ஆறு செல்போன்கள், எடைபோடும் சிறிய மெஷின், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பிடிபட்டவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். அதனால் போதைப்பொருளை விலைக்கு வாங்கி வந்த இவர்கள், ஒன்று சேர்ந்து வீட்டிலேயே அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த வகை போதைப்பொருளை எப்படி தயாரிப்பது என இணையதளத்தில் தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். பின்னர் அதற்குரிய மூலப் பொருள்களை பாரிமுனையில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு வேண்டும் எனக் கூறி வாங்கியிருக்கிறார்கள்.

கைது

இதையடுத்து வீட்டிலேயே போதைப்பொருளை தயாரித்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் எனக் கருதி அவர்களைக் கண்டுக்கொள்ளவில்லை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட போதைப்பொருளை இந்தக் கும்பல் விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.