நாளை கரையை கடக்கும் 'டானா' புயல்.. 10 லட்சம் பேரை இடம் மாற்றிய ஒடிசா அரசு..!
WEBDUNIA TAMIL October 24, 2024 09:48 PM


வங்கக் கடலில் உருவான டானா புயல் நாளை கரையை கடக்க இருப்பதால், ஒடிசா மாநில நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சம் பேரை இடம் மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்போது டானா புயலாக மாறி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநில அரசு 14 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

புயல் கரையை கடக்கும்போது கனமழையுடன் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டானா புயல் தற்போது 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மிகப்பெரிய பொருள் சேதம் ஏற்படக்கூடும் என்பதால், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.