சென்னையில் அதிர்ச்சி... ரத்த வெள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து ஓட்டுநர்... குடிபோதையில் பயணி தாக்கியதில் மரணம்!
Dinamaalai October 25, 2024 02:48 PM

சென்னையில் நேற்றிரவு மாநகர அரசு பேருந்தில் குடிபோதையில் ஏறிய பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் ஏற்பட்ட தகராறு, பேருந்தின் நடத்துநர் ஜெகன் குமார் என்பவரின் உயிரை பலி வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். 

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து எம்கேபி நகர் வரை இயக்கப்படும் 46 G எனும் எண் கொண்ட பேருந்தில் ஜெகன் குமார் என்பவர் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். நேற்று இந்த பேருந்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் எனும் பயணி, நடத்துநர் ஜெகன் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் பேருந்தில் இருந்து நடத்துநர் ஜெகன் குமார் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலூரில் இருந்து துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்னை வந்திருந்த கோவிந்தன், அதில் பங்கேற்று விட்டு மீண்டும் வேலூர் செல்வதற்காக கோயம்பேட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். எம்.கே.பி. நகரில் இருந்து கோயம்பேடு சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறியவர், பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்த போது, அடுத்த ஸ்டேஜ் நெருங்கியதால், டிக்கெட் எடுப்பதற்காக நடத்துநர் ஜெகன்குமார், பேருந்தை ஒரமாக நிறுத்த சொல்லியிருக்கிறார். 

ஒவ்வொரு பயணியாக டிக்கெட்  கொடுத்துக் கொண்டிருந்த போது, பயணசீட்டு எடுப்பது தொடர்பாக நடத்துநருக்கும், குடிபோதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, கைகலைப்பாக மாறியுள்ளது. இதில் இருவரும் ஒருவரையொருவர் பேருந்துக்குள்ளேயே பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். சண்டை நீடித்த நிலையில், பேருந்தில் இருந்து ரோட்டில் இறங்கியும் சண்டை போட்டுள்ளனர்.

இந்த தகராறில் கோவிந்தன், நடத்துநர் ஜெகன்குமாரைப் பிடித்து தள்ளியதில், கீழே விழுந்த ஜெகன்குமார் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். கோவிந்தனுக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவலறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார். 52 வயதுடைய ஜெகன் குமாருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கோவிந்தனுக்கு  மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குடிபோதையில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவி, பல்வேறு இடங்களிலும் பேருந்துகளை தொடர்ந்து இயக்காமல் ஆங்காங்கே அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளனார்கள். அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து ஊழியர்கள் சம்மதம் தெரிவித்து பேருந்துகளை இயக்கத் தொடங்கினார்கள். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.