TNPSC Reforms: 2024-ல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம்; ஏன்? டிஎன்பிஎஸ்சி தகவல்
மாய நிலா October 25, 2024 04:14 PM

அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையை வேகப்படுத்தும் வகையில், கணினி வழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகள், அதன் முடிவுகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது குறித்து புள்ளிவிவரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு, கணினி வழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு முறையை வேகப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எந்தெந்தத் தேர்வுகளுக்கு கணினி முறை?

2024ஆம் ஆண்டில், குரூப் 1பி, 1 சி தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட்டு உள்ளன. அதேபோல ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான நேர்முகத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வுகள், டிப்ளமோ, ஐடிஐ அளவிலான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு, அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ஆகியவற்றுகான தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட்டுள்ளன என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதேபோல, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அல்லாத தேர்வுகளுக்கான கவுன்சிலிங் ஆகியவை 6 முதல் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.