அடிச்சது ஜாக்பாட்.. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பை உயர்த்திய மத்திய அரசு!
சுதர்சன் October 25, 2024 07:14 PM

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான முதலீடு இன்றி தவிப்போர் நாட்டில் ஏராளம். கடனுக்காக வங்கிக்குச் செல்லும்போது, ​​ஏதேனும் சொத்தை உத்தரவாதமாகக் கேட்கிறார்கள். சொத்துக்கள் இருந்தால் ஏன் கடன் வாங்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர்.

இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு தான் மத்திய அரசின் தொடங்கியுள்ள 'பிரதான மந்திரி முத்ரா யோஜனா' (PMMY) திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், எந்த உத்தரவாதமும் வழங்காவிட்டாலும், கடன் வழங்கப்படும். 

இந்த நிலையில், கடந்த ஜூலை 23ஆம் தேதி, 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு  ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடன் வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது, நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக எதிர்கால தொழில்முனைவோருக்கு அவர்களின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும்.

இந்த நடவடிக்கை  வலுவான தொழில்முனைவோர் சூழல் அமைப்பை வளர்ப்பதில் அரசின் உறுதியை நமக்கு எடுத்துரைக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புதிய வகை தருண் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, தருண் திட்டத்தின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் கிடைக்கும். பிரதமரின்  முத்ரா திட்டத்தின் கடன்களுக்கான உத்தரவாதக் காப்பீடு நுண் அலகுகளுக்கான கடன் உத்தரவாத நிதியின் கீழ் வழங்கப்படும்.

தேனீ வளர்ப்பு, கோழிப்பண்ணைகள், மீன் வளர்ப்பு, பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள், டிபன் சென்டர்கள், உணவு விடுதிகள், லாரி, வண்டி, ஆட்டோ டிரைவர்கள், பழுதுபார்க்கும் கடைகள், மெஷின் ஆபரேட்டர்கள், கைவினைத் தொழில்கள், தையல் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல சுயதொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.

கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  உத்யமிமித்ரா இணையதளம் www.udyamimitra.in மூலமும் விண்ணப்பிக்கலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.