கண்ணுக்கு தெரிகிற நிறவெறியைவிட, கண்ணுக்கே தெரியாத சாதிவெறி கொடுமையானது- உதயநிதி ஸ்டாலின்
Top Tamil News October 26, 2024 05:48 AM

தோல் மூலம் கண்ணுக்கு தெரிகிற நிறவெறியைவிட, கண்ணுக்கே தெரியாத சாதிவெறி கொடுமையானது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “களத்தில் மட்டுமல்ல, கொள்கையிலும் உறுதியானவர் மாண்புமிகு அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் என்பதற்கு அவரின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலே சாட்சி! இது இளைஞர்களுக்கான அரசியல் வழிகாட்டி. அமெரிக்காவில் நிற வெறியை எதிர்த்து கருப்பின இயக்கம் போராடியது. இங்கு சாதியை எதிர்த்து கருப்பு சட்டை போட்டு திராவிட இயக்கம் போராடியது. இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் கருப்பு நிறத்தை இழிவாக நினைத்தார்கள். ஆனால், அதே கருப்பு நிறத்தை புரட்சிக்கான அடையாளமாக மாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். தோல் மூலம் கண்ணுக்கு தெரிகிற நிறவெறியைவிட, கண்ணுக்கே தெரியாத சாதிவெறி கொடுமையானது.

அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு, வெள்ளையின மக்கள் பேருந்தில் நின்றால், கருப்பின மக்கள் உட்கார்ந்த இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கொடூரம் அரங்கேறியது. ரோசா பார்க்ஸ் என்ற கருப்பினத்தவர் தனது பேருந்து இருக்கையை ஒரு வெள்ளை மனிதருக்கு கொடுக்க மறுத்ததால் அவரை காவல்துறை கைது செய்தது, பின்னர் மிகப்பெரிய போராளியாக ரோசா பார்க்ஸ் மாறுகிறார். அவரின் கைதை எதிர்த்து கருப்பிண மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதன்பிறகு கருப்பின மக்கள் சமமாக நடத்தப்பட்டார்கள். 

அதற்கு இணையான ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துள்ளது. 1930 காலக் கட்டத்தில் நீதி கட்சியின் முன்னணி தலைவர் WPA சௌந்தரபாண்டியனார், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தார். பட்டியலின ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்றாமல் இருந்த கொடுமைக்கு எதிராக, இனி அம்மக்களை  பேருந்துகளில் ஏற்றவில்லை என்றால், அப்பேருந்தின் உரிமை ரத்து செய்யப்படும் என அறிவித்தார். அமெரிக்காவில் போராடி பெற்ற உரிமையை, தமிழ்நாட்டில் போராட்டம் இல்லாமல் பெற்றுக்கொடுத்தது நீதிக்கட்சி!” எனக் கூறினார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.