`திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவது உறுதி' - அடித்துச் சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்
Vikatan October 26, 2024 05:48 AM

வருகின்ற 30-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறுகின்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில், நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்தை வங்கி லாக்கரிலிருந்து எடுத்து கொடுப்பதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று மதுரை வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மக்களின் கோரிக்கையை ஏற்று 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கினார், இந்த ஆண்டு குருபூஜைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க பொருளாளர் என்ற முறையில் தங்க கவசத்தை வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துள்ளோம்.

கூட்டணி குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணிகள் ஏற்படும். தேர்தல் நேரத்தில் பேச வேண்டியது, எல்லோரும் தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்க ரெடியாக உள்ளது.

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறும் தினகரனுக்கும், கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் வேறு கட்சியை தொடங்கி விட்டார். தொண்டர்கள் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம், தினகரனுக்கு எந்த தகுதியும் கிடையாது. 2026-ல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வருவார்.

திண்டுக்கல் சீனிவாசன்

வைத்திலிங்கத்தின் மீதான சோதனை குறித்து மத்திய அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். விஜய் நடத்தும் மாநாடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். அதனால் நோ கமென்ட்ஸ்.

பெரிய ஜோசியக்காரர் போல ஸ்டாலின் பேசுகிறார், திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். திமுக-வில் என்னதான் விவாதம் நடந்தாலும் நிச்சயம் விரிசல் ஏற்படுவது உறுதி. எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடுதான் எங்களுடையதும்" என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.