சென்னை: தனியார் பள்ளியில் அமோனியா வாயு கசிவா? - 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம்... நடந்தது என்ன?
Vikatan October 26, 2024 05:48 AM

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிந்ததாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாகத் தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை உடனடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதோடு, காவல்துறையினரும் பள்ளிக்கு விரைந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மயக்கமடைந்த மாணவிகள்

முதற்கட்ட விசாரணையில், பள்ளியின் வேதியியல் ஆய்வகத்திலிருந்து அமோனியா வாயு கசிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபக்கம், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பலர் பள்ளி நிர்வாகம் மெத்தமானதாகச் செயல்பட்டதாகக் கூறி பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, ``நாங்கள் முதலில் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அங்கிருக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். போலீஸார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள்.

கலாநிதி வீராசாமி

பள்ளியின் மூன்றாவது மாடியில் மூன்று வகுப்பறைகளில் இந்தப் பிரச்னை இருந்ததாகக் கூறினார்கள். பள்ளி ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டபோது, மதியவேளையில் இது நடந்திருப்பதாகவும், தாங்களும் அதை லேசாக உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். அதோடு, உடனடியாக மாணவிகளைக் கீழே இறக்கிவிட்டதாகவும் கூறினர். இப்போதைக்கு, அதிகாரிகள் ஆய்வறிக்கை கொடுத்த பிறகுதான் உண்மை தெரியவரும்" என்று கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.