Champions Trophy: `இந்திய அணி வரவில்லையென்றால்..!' - ICCக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?
Vikatan November 12, 2024 01:48 AM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் முக்கியமான தொடர்களில் ஒன்று சாம்பியன்ஸ் டிராபி. 1998 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி `மினி உலகக் கோப்பை' என்றழைக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்றிருக்கும் 8 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன.

2017 சாம்பியன்ஸ் டிராபி

கடைசியாக 2017-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து, அதிக முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற அணி என்ற அரிய வாய்ப்பை தவறவிட்டது. அதன்பிறகு இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவில்லை.

இவ்வாறிருக்க நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி தொடரை அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்தவிருக்கிறது. ஆனால், இந்திய அணி 2008 முதல் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்திவிட்டது. மேலும், இரு அணிகளும் கடைசியாக 2012-13ல் இருதரப்பு தொடரில் விளையாடியிருந்தது.

பிசிசிஐ

இந்தியாவில் நடைபெற்ற அந்தத் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் முடிய, மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது பாகிஸ்தான். அதன்பிறகு, இரு அணிகளும் நேருக்கு நேர் இருதரப்பு தொடரில் விளையாடாததால், ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை தொடர்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் பெரும் வணிகமாக்கப்பட்டது.

இவ்வாறான சூழலில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்திய அணிக்காக பாதுகாப்பில் உத்தரவாதம் அளித்து அவர்களுக்காகவே தனி முன்னெடுப்புகளை எடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காகக் காத்திருந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிதாக இதில் ஆர்வம் காட்டாமல் மௌனமாகவே இருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப்

இந்த நிலையில், ஊடகத்திடம் பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப், ``பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் இருப்பதால்தான் ஐ.சி.சி இருக்கிறது. இந்தியாவைப் போல பாகிஸ்தான் அரசும், நாங்கள் விளையாட மாட்டோம் என்று கூறினால் யாரும் போட்டியைப் பார்க்கமாட்டார்கள். அதன்பிறகு ஐ.சி.சி-யால் எந்தப் பயனும் இருக்காது. நீங்கள் (இந்திய அணி) ஏற்கெனவே கையெழுத்திட்டிருப்பதால், ஐ.சி.சி தொடர்களை மறுக்க முடியாது. இந்த முறை இந்தியா வரவில்லை என்றால், நாங்களும் பங்கேற்க மாட்டோம் என்ற மிகப்பெரிய அடியை பாகிஸ்தான் அணி எடுத்துவைக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

2029-ல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.