மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் உட்படப் பல தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க தலைவர்கள் ஆரம்பத்தில் பிரசாரத்தில் பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வந்தனர். ஆனால், இப்போது அதனை முற்றிலும் மாற்றிக்கொண்டு மத ரீதியாகத் தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, பா.ஜ.க தலைவர்கள் வோட் ஜிகாத்தை மையப்படுத்தி பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா அளித்திருந்த பேட்டியில், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற வோட் ஜிகாத் சதி நடப்பதாகத் தெரிவித்திருந்தார். அடுத்த இரண்டு நாளில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இதே பிரச்னையைக் கிளப்பி இருக்கிறார்.
மோடி - அமித்ஷாசிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் ஒளரங்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தேவேந்திர பட்னாவிஸும் வோட் ஜிகாத் குறித்துப் பேசினார். அவர் தனது உரையில், "வோட் ஜிகாத்தை தர்ம யுத்தத்தின் மூலம் எதிர்கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களில் சிறுபான்மை வாக்குகளை மகாவிகாஷ் அகாடி வெற்றி பெறப் பயன்படுத்திக்கொண்டன. அப்போது நாம் விழித்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது விழித்துக்கொண்டுள்ளோம். ஒளரங்காபாத் பெயரை மாற்றி இருக்கிறோம். இனி அதனை மீண்டும் ஒளரங்காபாத் என்று மாற்ற யாரும் துணியமாட்டார்கள். மகாராஷ்டிராவில் 14 மக்களவைத் தொகுதியில் வோட் ஜிகாத் தாக்கம் இருக்கிறது. எனவே இந்துக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்" என்றார்.
இதே போன்று மத்திய அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று பேசினார். பிரதமர் நரேந்திர மோடியும், "நாம் ஒரே அணியாக இருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு" என்று பேசினார். ஒரே நேரத்தில் பா.ஜ.க தனது தேர்தல் பிரசாரத்தில் இந்துத்துவாவை மையப்படுத்தி இருப்பது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் ஒவைசி கூறுகையில், "அவர்களுக்கு ஓட்டு கிடைக்காதபோது வோட் ஜிகாத்தை கையில் எடுக்கின்றனர்'' என்றார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "லவ் ஜிகாத் மற்றும் நில ஜிகாத்தின் மையமாக மகாராஷ்டிரா மாறக்கூடும். மகாராஷ்டிரா அதற்கு இடமளித்துவிடக்கூடாது'' என்றார்.
பா.ஜ.க திடீரென வோட் ஜிகாத்தை கையில் எடுத்திருப்பது குறித்து சிவசேனா (உத்தவ்) தலைவர்களில் ஒருவரான சுஷ்மா அந்தரே கூறுகையில், “பா.ஜ.க-வின் அதே பழைய பிளவுபடுத்தும் அரசியலும், தேவேந்திர பட்னாவிஸின் தீவிர எதிர்மறை அரசியலும் மகாராஷ்டிரா அரசியலில் இப்போது இணைந்திருக்கிறது. அவர்களின் வெற்று நலத் திட்டங்களும், லட்ஹி பெஹின் போன்ற அரசியல் சூழ்ச்சிகளும் மகாராஷ்டிர மக்களைக் கவரத் தவறிவிட்டது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும், நான் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் இது எனக்குப் புலப்பட்டது. அவர்கள் பல இடங்களில் தோல்வி அடைவதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் இந்த ‘வோட் ஜிஹாத்’ கதையைச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்'' என்றார்.
யோகி ஆதித்யநாத்இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், “தேர்தல் நேரத்தில் பா.ஜ.க தலைவர்கள் இது போன்று கூறுவது வழக்கமான ஒன்றுதான். மற்ற அனைத்தும் தோல்வியுற்றால், அவர்கள் மோசமான இழப்பை எதிர்நோக்கும்போது, அவர்கள் 'வோட்-ஜிஹாத்,' 'ஏக் ஹை டோ சேஃப் ஹை' போன்ற கதைகளை நாடுகிறார்கள். இது வாக்குகளைப் பெற மற்றொரு முயற்சி'' என்றார். வரும் நாட்களில் இப்பிரசாரம் மேலும் தீவிரம் அடையலாம் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...