மகாராஷ்டிரா: 10 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிப்பதில் சிக்கல்... என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?
Vikatan November 14, 2024 06:48 PM
புலம்பெயரும் கரும்புத் தொழிலாளர்கள்..

நாட்டில் சர்க்கை உற்பத்தியில் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அறுவடை நவம்பர் மாதத்தில் தொடங்கும்.

மகாராஷ்டிராவில் புனே, நாசிக், சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் கரும்பு விளைகிறது. இது தவிர கர்நாடகா, தெலங்கானாவிலும் கரும்பு விளைகிறது.

மகாராஷ்டிராவில் துலே, பர்பானி, நந்துர்பர், பீட், ஜல்காவ் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கரும்பு வெட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தோடு பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு தற்போது கரும்பு அறுவடை சீசன் தொடங்கி இருப்பதால் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் கிராம பகுதியில் இருந்து கரும்பு விளையும் இடங்களுக்கு தற்காலிகமாக புலம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

கரும்புத் தொழிலாளர்கள் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மகாராஷ்டிரா..!

ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவை சீசனை எப்போது தொடங்குவது என்பது குறித்து அமைச்சரவைதான் கூடி முடிவு செய்யும். இந்த ஆண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே கரும்பு அரவை சீசனை எப்போது தொடங்குவது என்று அரசு முடிவு செய்துவிட்டது.

மொத்தம் 10 லட்சம் கரும்புத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் கரும்பு வெட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து செல்வதுண்டு. சில மாதங்கள் வரை தங்கி இருந்து கரும்பு அறுவடை செய்துவிட்டு வருவது வழக்கம். இதற்காக அவர்கள் பாத்திரங்கள், துணிகளுடன் வாகனங்களில் செல்வதுண்டு. தற்போது 15ம் தேதி தொடங்கும் கரும்பு அரவை சீசனையொட்டி கரும்பு வெட்டும் வேலைக்காக இப்போதே தொழிலாளர்கள் வண்டிகளில் புறப்பட்டுவிட்டனர்.

மாநில அரசு இதுகுறித்து முன்கூட்டியே திட்டமிட்டு முடிவெடுக்காமல், இப்போது தேர்தலுக்காக "கரும்பு அரவை சீசனை 10 நாள்கள் தள்ளி வைக்கவேண்டும்" என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்:

ஆனால் தொழிலாளர்கள் ஏற்கெனவே கரும்பு வெட்ட பல நூறு கிலோமீட்டர் பயணத்தை தொடங்கிவிட்டனர். அவர்கள் 1200 கிலோமீட்டர் தூரம் வரை சென்று கரும்பு வெட்டுவது வழக்கம். எனவே கரும்பு வெட்டும் தொழிலாளர்களை தேர்தல் அன்று அழைத்து வந்து வாக்களிக்கச் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் விடவேண்டும் அல்லது அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்களோ அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கரும்பு தொழிலாளர் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஆதங்கம்..

துலே மாவட்டத்தில் இருந்து 700 கிலோமீட்டர் பயணம் செய்து சாங்கிலிக்கு கரும்பு வெட்ட வந்திருக்கிருக்கும் சிவாஜி ஷிண்டே தனக்கும், தனது மனைவியும் தங்க சரியான இடம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இது குறித்து கூறுகையில், ஓட்டுப்போட விரும்புகிறோம். ஆனால் அரசியல் கட்சிகள் தான் எங்களை அழைத்துச்சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து விடவேண்டும். என்ன நடக்கும் என்று தெரியவில்லை'' என்றார்.

அதிகமான கரும்பு தொழிலாளர்களுக்கு தங்களது தொகுதி எது, தங்களது எம்.எல்.ஏ.யார் என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். இது குறித்து மற்றொரு தொழிலாளி கூறுகையில், "அரசியல்வாதிகள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்காக எதையாவது செய்திருந்தால் நாங்கள் பிழைப்பு தேடி இங்கு வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது. இப்போது எங்களது கிராமத்தில் வீட்டை பார்த்துக்கொள்ள வயதானவர்கள் இருக்கிறார்கள்'' என்றார்.

கரும்புத் தொழிலாளர்கள்

இது குறித்து கரும்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஹரிபாபு ரத்தோட் கூறுகையில், "15 லட்சம் கரும்புத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்குள்ள கரும்பு தொழிலாளர்கள் தமிழ்நாடு வரை சென்று கரும்பு வெட்டுகின்றனர். கரும்பு வெட்டும்பணி தொடங்கி இருப்பதால் மராத்வாடாவில் இப்போது கிராமங்கள் வெறிச்சோடி கிடக்கிறது. வெளியிடங்களுக்கு கரும்பு வெட்ட சென்ற வாக்காளர்களின் வாக்குகளை போலியாக வாக்களிக்கும் அபாயம் இருக்கிறது'' என்றார்.

விவசாயிகள், சர்க்கரை ஆலையின் நிலை..

மகாராஷ்டிராவில் கரும்பு மில்கள் அரவையை தாமதப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கெனவே 100 மில்கள் அரசிடம் இதற்கு மனு செய்து ஒப்புதல் பெற்று கரும்பு அரவைக்கான வேலையை தொடங்கிவிட்டன. கரும்பு அரவையை தாமதப்படுத்தினால் விவசாயிகள், சர்க்கரை ஆலைகளுக்கு இழப்பு ஏற்படும் என்று சர்க்கரை ஆலை நிர்வாகிகள் எச்சரித்தனர்.

கரும்புத் தொழிலாளர்கள்

அதோடு மகாராஷ்டிராவில் கரும்பு அரவையை தாமதப்படுத்தினால் தொழிலாளர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்றுவிடுவர். இதனால் மகாராஷ்டிராவில் கரும்பு அறுவடைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்று சர்க்கரை மில் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனால் 10 லட்சத்திற்கும் அதிகமான கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா தேர்தலில் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தம் 5 மாதம் கரும்பு அறுவடை செய்வார்கள். அந்த 5 மாதத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு தான் மற்ற மாதங்களுக்கான செலவை சரிசெய்யவேண்டிய நிலையில் கரும்பு தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.