தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 650 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரல், க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ் செல்வகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன் மற்றும் ராமர் தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கி முத்து முதல்நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரை பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, படகு மூலம் பீடி இலை பண்டல்களை கொண்டு செல்ல படகில் ஏற்றி கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் பீடி இலை பண்டல்கள், இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு படகு மூலம் தப்பி சென்றனர்.
கடற்கரையில் இருந்த 21 பண்டல்களில் சுமார் 30 கிலோ வீதம் 650 கிலோ பீடி இலை மற்றும் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.