சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குஹாய் நகரில் விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இரவு 7.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த விளையாட்டு அரங்கிற்கு வெளியே 70க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, மைதானம் அருகே கார் வேகமாக வந்தது. அப்போது வேகமாக வந்த கார் அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காருக்கு அருகில் இருந்த பென் என்ற 62 வயது நபரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விவாகரத்து காரணமாக சொத்து பிரிப்பதில் அதிருப்தி காரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது பென் தனது காரை மோதியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன விமானப்படை நாளை பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ள நிலையில் குஹாய் நகரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.