தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேப்பன்குளத்தில் சரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு மோகன சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஒன்பதாம் தேதி சரத்குமார் மது போதையில் வீட்டிற்கு வந்ததால் மோகனசுந்தரி அவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு மன உளைச்சலில் மோகனசுந்தரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்த சரத்குமார் தனது மனைவி சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். அதன் பிறகு தனது தம்பிக்கு தகவலை தெரிவித்து விட்டு மனைவி தூக்கிட்டு தொங்கிய அதே சேலையில் சரத்குமாரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.