இன்றைய காலத்தில் இணையதளம் மூலமாக மோகனம் முறையில் மோசடி செய்கின்றனர். இந்த நிலையில் வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிகிறது. பேஸ்புக்கில் பரவும் சில வீடியோக்களில் இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டுகின்றனர். குழந்தைபேர் இல்லாத பெண்களை மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை ரொக்க பரிசு கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறுகின்றனர்.
அதனை பார்க்கும் வேலையில்லாத ஆண்கள் பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். எங்களது கார் டிரைவர் உங்களை ஹோட்டலுக்கு அழைத்து சொல்வார். அங்கு நீங்கள் மேடமை பார்ப்பீர்கள். நீங்கள் அவருடன் உடலுறவு கொண்டு அவர்களை கர்ப்பம் தரிக்க வைத்தால் 20 லட்ச ரூபாய் பணம் கிடைக்கும். கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் உங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என மோசடிக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை நம்பும் நபர்கள் சம்மதம் தெரிவித்தால் வேலைக்கான அடையாள அட்டைக்கு 999 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். அதனை செலுத்திய பிறகு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி ஒரு லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கி ஏமாற்றும் சம்பவம் நடைபெறுகிறது. ஹரியானா, மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலை இல்லாத வாலிபர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறுகிறது.
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் இரண்டு மாதங்களுக்குள் ஒரு கும்பல் இடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை இழந்துவிட்டார். இதே போல மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிரைவரும் பணத்தை இழந்து விட்டார். மோசடி கும்பல் பேஸ்புக்கில் 9 வகையான கணக்குகளை வைத்திருக்கிறார்களாம். அதில் 28,000 மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.