`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan
Vikatan November 14, 2024 11:48 PM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

இந்தியா முழுவதும் இன்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அதுவும் பள்ளிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சாச்சா நேரு அதாவது மாமா நேரு என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் நவீன இந்தியாவின் சிற்பி எனப் போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

நேருவுக்கு குழந்தைகள் மீது அலாதியான பிரியம். அதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் இந்திய தேசத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என கருதினார்.எதிர்கால இந்தியாவை வழி நடத்துகிற, வல்லரசாக்குகிற வல்லமை அவர்களிடம்தான் உண்டு என்பதை முழுமையாக நம்பினார்.அதனால் குழந்தைகளை ஒவ்வொரு நாளும் உச்சி முகந்தார். அவர்களோடு நெருக்கமாக உரையாடினார்.

சித்தரிப்புப் படம்

குழந்தைகள் மீது நேரு வைத்துள்ள பிரியம் மற்றும் அதீத நம்பிக்கை ஆகியவற்றால் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, இந்திய தேசம் முழுவதும் 1957 முதல் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குழந்தைகளுக்கு ஒரு உற்சாகம் தரக்கூடிய தினமாகவும் அமைந்து விடுகிறது. 

குழந்தைகள் மீதான அக்கறை, அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்காக இந்தியாவில் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை, குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

குழந்தை என்பது ஒவ்வொருவரின் வாழ்நாளில் என்றும் மனதில் நிலைத்திருக்கும் வரங்களாகிப் போன தருணங்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதில்லை என்பதுதான் இங்கு நிதர்சனம்.

சித்தரிப்புப் படம்

ஒரு மொட்டு மலர்வதைப் போல அது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. ரசாயன பொருட்களை வைத்து காயை பழுக்க வைப்பதற்கு சமமாக குழந்தைகளின் மீது ஒரு 'பெரிய மனுஷத் தன்மை'யை பெற்றோர்கள் திணிக்கத்தான் செய்கிறார்கள்.

பின்னாளில் அக்குழந்தைகளின் நடத்தை மாற்றங்களுக்கும் நடத்தைப் பிறழ்வுகளுக்கும் அதுவே காரணமாக அமைந்து விடுகிறது.

இதில் பெரும் வேதனை என்பது அந்த 90"ஸ் கிட்ஸ்கள்தான், இன்றைய 20"ஸ் கிட்ஸ்களின் பெற்றோர்கள். மரப்பாச்சி பொம்மைகளுக்கு தாயாக மாறிய பாப்பாக்களும், சாய்ந்தாடும் மரக்குதிரைகளில் தேசிங்கு ராஜாவைப் போல முன்னும் பின்னுமாக குதிரை ஒட்டிய பையன்களும் இன்றைய குழந்தைகள் உலகில் அறவே இல்லை.

அப்படியான ஒன்று இருந்ததை குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தரவும் இல்லை.

குழந்தைகளால் கட்டமைக்கப்படும் உலகம் என்பது வேறு. அது கற்பனைகளுக்கு எட்டாத வேறு ஒரு உலகு.

அதனை கட்டமைக்கும் உரிமைகளை நாம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். நுங்கு வண்டிகள் ஓட்டும், பனை ஓலை காற்றாடிகளை காற்றின் எதிர் திசையில் ஓடியபடி சுழல விடும், பதுங்கிப் பதுங்கி தட்டான்களை, வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்கும், நாவல்மர இலந்தைமரத்தின் அடிகளில் உதிர்ந்த பழங்களை பொறுக்கும்,தென்னங் குறும்பைகளை குச்சியினால் துளை விட்டு அதன் தண்ணீரை குடிக்கும் சிறுவர் சிறுமிகளைக் காணாது குழந்தைகள் உலகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

நாம் சிறுவர் சிறுமிகளாக இருந்த போது பின்னிரவின் அதிகாலை நுனியில் அரிக்கேன் விளக்குகளை கைகளில் சுமந்தபடி அக்கா, அண்ணன், சித்திகளோடு குளத்து மேட்டில் நள்ளிரவில் விழுந்த பனம்பழங்களை சேகரித்து வந்து எரியும் விறகு அடுப்பில் சுட்டுத் தின்ற ருசியை நம் நாவுகள் இன்றும் கடந்த காலத்தில் துழாவிக்கொண்டுதானே இருக்கிறது?

சித்தரிப்புப் படம்

தாமரைக் குளத்து நடுவில் பூத்துக் கிடக்கும் தாமரை பூக்களை தண்டு முட்கள் எவ்வளவோ கீறினாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தாமரை மலர்களை பறித்து வாகை சூடியவர்கள் தானே நாமெல்லாம்? அல்லி குளங்களில் எருமை மாடுகளை போல ஊறிக் குளித்து, அல்லி மலர்களை பறித்து அதன் தண்டை இடமும் வலமுமாக உடைத்து கழுத்துக்கு மாலையாக சூடி குதூகலித்திருந்தவர்கள்தானே நாம்?

இன்றைய அதி நவீன தொடர்பு சாதனங்களால் அதிகமாக பறிபோவது குழந்தைகளுக்கான உலகம்தான்.

பொன்வண்டுகளைப் பிடித்து கொட்டாங்குச்சிகளில் போட்டு, அதனை வெள்ளை துணிகளால் கட்டி, கிழுவ இலைகளை பொன்வண்டுகளுக்கு தின்னத் தந்து அது போடும் கருகாமணி அளவுக்கு சின்னதான வெள்ளை முட்டைகளைப் பார்த்து நம் வெண்பற்களால் புன்னகைத்தவர்கள் அல்லவா நாம்?

அமுல் பால் டப்பா முழுவதும் பளிங்குகளை சேகரித்து, இரண்டு காற்சட்டை பைகளிலும் அள்ளிப்போட்டு விளையாட வீதிகளுக்கு நடந்த போது அவை எழுப்பிய "சலக்...சலக்..." சத்தங்கள் நம் காதுகளை விட்டு இன்னும் நீங்கவில்லைதானே?

அப்படியான ஒரு அற்புத குழந்தைகள் உலகில் ஊறிப் போய் வாழ்ந்த நாம்தான் இன்று குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவோ அல்லது தாத்தா, பாட்டிகளாகவோ இருக்கிறோம். நாம் வாழ்ந்த நமது குழந்தைகள் உலகை அவர்களுக்குள் கடத்தாததும், நாம் வாழ்ந்த அந்த குழந்தைகள் உலகை அடைகாத்து அவர்களுக்கு மீண்டும் வழங்காததும் நமது மாபெரும் குற்றமல்லவா?

எவ்விதமான சூதுவாதும் சாதி, மத,பேதங்களும் அறியாத அற்புதமான பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகளின் உலகை குழந்தைகள்தான் தீர்மானிக்க முடியும்.

எத்தனை ஹாரி பாட்டர்களாலும் குழந்தைகளுக்கான உண்மையான உலகத்தை படைத்து விட முடியாது. அது குழந்தைகளால் மட்டுமே முடியும்.

இன்றைய அதி நவீன தொடர்பு சாதனங்களால் அதிகமாக பறிபோவது குழந்தைகளுக்கான உலகம்தான். குழந்தைகளின் எதிர்காலம் எதிர்காலம் என பதறிப் பதறி குழந்தைகளின் நிகழ்காலத்தை உதறி விடுவதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் வாடிக்கையாக இருந்து விடுவது இன்றைய எதார்த்தமாக இருக்கிறது.

இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கான முழு சுதந்திரத்தை வழங்கி அதற்கான சூழலை உருவாக்கினால் மட்டுமே குழந்தைகளின் ஒவ்வொரு தினமும் குழந்தைகளின் மனங்களை குதூகலிக்கும் தினங்களாக மாறும்.இதைத்தான் பண்டித ஜவஹர்லால் நேருவும் விரும்பினார்.

சித்தரிப்புப் படம்

சூழல்தான் ஒருவரின் வாழ்வை வடிவமைக்கிறது. எதிர்காலத்தை கவனத்தில் கொண்டே நிகழ் காலத்தை உதாசீனப்படுத்துவது இங்கே வாழ்வியல் முரணாக உள்ளது.குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவதுதான் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அரணாக அமையும்.

ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் நாமும். இன்றைக்கு குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுகிறோமா? என்பதை கொஞ்சமாவது எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்களேன்...ப்ளீஸ்!

- க.தங்கபாபு

முத்துப்பேட்டை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.