ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. பொது தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் இரண்டு நாட்கள் வரை காத்திருந்தும் தரிசனம் செய்கிறார்கள்.
பொது தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக, 300 ரூபாய் கட்டணத்தில் விரைவு தரிசன டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இந்த முறையை ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்த டிக்கெட்டை நேரடியாக பெற முடியாது. ஆன்லைனில் சில மாதங்களுக்கு முன்பே, டிக்கெட் வெளியிடப்படும். அதனை சரியாக கவனித்து முன்பதிவு செய்யவேண்டும்.
இதேபோல், வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டும் உள்ளது. இதனை பெற கோவிலுக்கு 10,000 ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டும். அதாவது, நாடு முழுவதும் கோவில்களை கட்டவும் பராமரிக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு இந்த நன்கொடையை செலுத்தவேண்டும். நன்கொடையுடன் தரிசன டிக்கெட்டுக்கான 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தினால் ஒரு நபருக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
இந்த நிலையில் விரைவாக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறும் வகையில் திருமலையில் உள்ள கோகுலம் கலையரங்கின் பின்பக்கம் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நேற்று ரிப்பன் வெட்டி ஸ்ரீவாணி தரிசன கவுண்டர்களை திறந்து வைத்தார். பிறகு சிறப்பு பூஜை செய்து, பக்தரின் விவரங்களை கேட்டு டைப் செய்து முதல் தரிசன டிக்கெட்டை ஒதுக்கீடு செய்தார்.