சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி கோவிந்தன் தெருவில் தனுஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். தனுஷ் அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது காவியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று வளைகாப்பு நடத்துவது தொடர்பாக காவியா தனது தாயிடம் தெரிவித்தார்.
அதற்கு காவியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். காவியாவின் பெற்றோர் பழனியில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் செல்போன் மூலம் தனது மகளிடம் சேலத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கு காவியா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டார். இந்த நிலையில் சாரதா கல்லூரி மேம்பாலம் இறங்கும் இடத்தில் சென்ற போது காவியாவின் துப்பட்டா மோட்டார் சைக்கிளில் சிக்கியது.
இதனால் காவியா கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனுஷ் தனது மனைவியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காவியா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை காவியா உயிரிழந்தார். மகளின் வளைகாப்புக்காக வந்த பெற்றோர் இறுதி சடங்கில் பங்கேற்கும்படி ஆகிவிட்டதே என கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .