சென்னை: 45 நாள்களேயான ஆண் குழந்தை கடத்தல் - அரசு உதவி தொகை வாங்கி தருவதாகக் கூறி கடத்திய பெண்!
Vikatan November 14, 2024 11:48 PM

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்ததோடு ஆண் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், நிஷாந்தியிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண், ``பிறந்த குழந்தைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உன்னுடைய குழந்தையையும் அந்த திட்டத்தில் சேர்த்தால் உதவி தொகைகள் கிடைக்கும். அந்தப் பணத்தை வாங்கித் தர நான் உனக்கு உதவுகிறேன். இதற்காக நாம் இருவரும் சென்னை தி.நகருக்கு குழந்தையோடு செல்ல வேண்டும்" எனக் கூறியிருக்கிறார். அதை நம்பிய நிஷாந்தியும் தன்னுடைய ஆண் குழந்தையோடு தி.நகருக்கு அந்தப் பெண்ணுடன் ஆட்டோவில் சென்றிருக்கிறார்.

கடத்தல்

தி.நகருக்கு சென்ற நிலையில் குழந்தை பசியால் அழுதிருக்கிறது. உடனே, அந்தப் பெண் நிஷாந்தியிடம், குழந்தைக்கு பால் வாங்கி கொடு என கூறி 100 ரூபாயை கொடுத்திருக்கிறார். அதை வாங்கிய நிஷாந்தியும் குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையோடு அந்தப் பெண் ஆட்டோவில் எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்தி கதறி அழுதபடி தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாள் தலைமையிலான போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தையை தேடிவருகிறார்கள். அதோடு குழந்தை கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் போட்டோவோடு சி.சி.டி.வியில் பதிவான பெண்ணின் போட்டோவையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மேலும் ஆட்டோவின் பதிவு நம்பர் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.