தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வரிசையாக ஹிட் கொடுத்த ஏ.ஆர். முருதாஸைப் போல அஜீத்துக்கு வரிசையாக ஹிட் கொடுத்தவர்தான் ஹெச். வினோத்.
இப்படி இரு இயக்குநர்களும் இரண்டு உச்ச நடிகர்களுக்கும் மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்த நிலையில் விஜய்யின் 69-வது படத்தினை இயக்க ஹெச்.வினோத் தான் சரியான இயக்குநர் எனக் கூறிவந்த நிலையில் தற்போது அது மெய்யாகி ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் உறுதியான நிலையில் அடுத்து இன்னொரு ஹீரோயினையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது சமந்தாவாகக் கூட இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் கடைசிப் படமான இன்னும் பெயரிடப்படாத தளபதி 69-ல் மற்றொரு முக்கிய நடிகர் இணைந்துள்ளார். அவர்தான் கன்னட சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிவ்ராஜ்குமார்.
ஏற்கனவே ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் சில காட்சிகள் வந்தாலும் மாஸ் காட்டிய சிவ்ராஜ்குமார் அடுத்து தளபதி 69-ல் இணைந்துள்ளார்.இதனை பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்திய சிவ்ராஜ்குமார். என்னுடைய கதாபாத்திரத்தை படத்தில் எப்படிக் கொண்டுவரப்போகிறார்கள் என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போகும் வேளையில் இப்படத்தினை அடுத்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் விஜய்க்கு இது கடைசிப் படமாகவும் இருப்பதால் பல முன்னணி நட்சத்திரங்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.