தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமே இல்லை என்று அரசு சொல்வது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மாநிலம் முழுவதும் தாராளமாகக் கிடைப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகி வருவது கவலைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே தலைகுனிய வைத்திருப்பதாக ஜெயக்குமார் வேதனை தெரிவித்துள்ளார். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று பெயரெடுத்த மண்ணில், இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.