தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை மற்றும் அரசு துறைகளை கட்டமைத்து வருகின்றார். அந்த வகையில் தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த அரசாங்க சிறப்பு திறன் துறையை உருவாக்கியுள்ள இவர் அதன் தலைவர்களாக எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை நியமித்துள்ளார். அரசாங்க துறைகளை சீரமைத்து தேவையற்ற செலவுகளை குறைப்பது, அதீத கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆகியவற்றை கவனித்து அரசு நிர்வாகத்திற்கு இவர்கள் உதவுவார்கள் என்று டிரம்ப் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவு ஏற்படுத்தும் பலருக்கு இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தை வெளியிலிருந்து வழிநடத்த உள்ள இவர்கள் வெள்ளை மாளிகையுடன் இணைந்து நிதி நிலையை கவனித்து கொள்வார்கள். இதுவரை அரசு காணாத புத்தாக்க திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு ஜூலை 4-ம் தேதியை இலக்காக நிர்ணயத்தில் வைத்துள்ள டிரம் அதற்குள் அமெரிக்க பொருளாதாரத்தை தாராளமாகி ஊழல் மற்றும் தேவையற்ற செலவினங்களை குறைக்க இவர்கள் இருவரும் உதவுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் 250 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தில் மிகுந்த திறன் வாய்ந்த குறைந்த துறைகளைக் கொண்ட அரசாங்கம் மக்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.