இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அனைத்து சிறப்பு தரிசனங்களையும் ரத்து செய்துள்ளது கோவில் நிர்வாகம்.
அதே போன்று நாளை ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் குவிய துவங்கியுள்ளனர். ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னாபிஷேகத்தைக் காண்பதற்காகவும் தஞ்சையிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமியுள்ளனர்.
ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் கிரிவலம் செல்ல தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிகின்றனர். இந்நிலையில், ஐப்பசி மாத பெளர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது என்பதால் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர துவங்கியுள்ளனர். அன்னாபிஷேகத்தை இன்று மாலை தரிசித்து நாளை அதிகாலை 3.30 மணியளவில் பெளர்ணமி துவங்குவதால் கிரிவலம் செல்லவும் தயாராகி வருகின்றனர்.
அதே போன்று, தஞ்சை பெரிய கோவிலிலும், அன்னாபிஷேக தரிசனத்திற்காக பக்தர்கள் குவிய துவங்கியுள்ளனர். ஐப்பசி மாத பௌர்ணமி நாளை நவம்பர் 15ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் துவங்கி நாளை மறுநாள் நவம்பர் 16ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த பெளர்ணமி தினம் வெள்ளிக்கிழமையன்று வருவது கூடுதல் விசேஷம். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருவண்ணாமலை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை பெளர்ணமியையொட்டி இன்று முதலே தஞ்சையிலும், சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும் பக்தர்கள் குவிய துவங்கி உள்ளனர். சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி சென்று தரிசிக்க நவம்பர் 16ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.