வெம்பக்கோட்டை அகழாய்வு.. களிமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள் கண்டெடுப்பு!
Dinamaalai November 15, 2024 12:48 AM

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி, ஜூன், 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.இந்த அகழாய்வில் இதுவரை, உடைந்த நிலையில் உள்ள தங்க காசுகள், செப்பு காசுகள், சுடு மண் சிலைகள், சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள். வட்ட  சில்லு போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், தோண்டப்பட்ட குழியில் 6000 ஆண்டுகள் பழமையான ஜாஸ்பர் மற்றும் சார்ட் எனப்படும் நகைகள் தயாரிக்கும் கல் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியின் போது இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டு சுமார் 6000 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று புதிதாக தோண்டப்பட்ட குழியில் விரலால் சுண்டி விடப்படும் களிமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள் , சங்கு வளையல்கள், ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து அகழ்வாராய்ச்சி இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''முன்னோர்கள்  விளையாட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இப்போது விரல்களால் விளையாடக்கூடிய பொருட்கள் உள்ளன. இரும்புக் காலத்திற்கு ஆதாரமாக ஒரு ஆணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்களுக்கு சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன என்றார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.