மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரை விடுவித்தது எப்படி?... உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
Dinamaalai November 15, 2024 01:48 PM

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது என்று உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியிருக்கிறது. 

நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இதே போல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கோர்ட்டு ரத்து செய்தது.

இது குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது, “டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை சென்னை ஐகோர்ட் எவ்வாறு விடுவித்தது? என கேள்வி எழுப்பியுள்ளது. பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது? இது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஆதாரம் இருந்ததால் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை தந்தது. குற்றவாளிக்கள் 9 பேரும் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.