CT 25: இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்வதில் நீடிக்கும் குழப்பமும்... ஷாகித் அஃப்ரிடியின் விருப்பமும்!
Vikatan November 15, 2024 03:48 PM

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில், பாதுகாப்பு காரணங்களால் 2008-க்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் இந்திய அணி, இதே காரணத்தைக் கூறி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறியிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான்

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசிடம் ஆலோசனை நடத்தித் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவிருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், இந்திய அணி வராததற்கான காரணங்களைக் கோரி ஐ.சி.சி-க்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனால், இந்திய அணிக்காகப் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐ.சி.சி வேறு நாட்டுக்கு மாற்றுமா அல்லது அங்கு சென்றுதான் ஆக வேண்டும் என்று கூறுமா அல்லது இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தத் திட்டமிடுமா என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் , ``1970-களின் பிற்பகுதியில் இருந்து கிரிக்கெட் தனது மிகப்பெரிய சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய இக்கட்டான சூழலில் இருக்கிறது. இது, வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு விளையாட்டு நம்மை ஒன்றிணைக்க வேண்டிய நேரம். வரலாற்றால் ஒருமுறை பிரிந்த நாடுகள் ஒலிம்பிக்கில் ஒன்றிணையும்போது, கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் டிராபியில் நாம் ஏன் இதைச் செய்ய முடியாது?

ஷாகித் அப்ரிடி

இதன் பொறுப்பாளர்களாக ஈகோவை கட்டுக்குள் வைத்திருக்கவும், விளையாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் கிரிக்கெட்டுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபிக்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு வந்து எங்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை அனுபவித்து, மறக்க முடியாத நினைவுகளுடன் வெளியேறுவதைப் பார்ப்பேன் என நம்புகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள், "சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் பங்கெடுப்பும், இந்தியா- பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டிகளும் இல்லாமல் போனால், அது ICC யின் வருமானத்தை பாதிக்கும்" என்கின்றனர்.

இந்திய அணிக்கு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வேறு நாடுகளில் போட்டியை நடத்துமாறு பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் கடைசி வெள்ளை பந்து இருதரப்பு தொடரை 2012-2013 இந்தியாவில் விளையாடிருந்தன என்பது குறிப்பிடதக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.