திருமணத்திற்கு பிறகு தனுஷ் தனது மனைவியுடன் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு காவ்யாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு ஒருமுறை கூட வந்ததில்லை. இந்நிலையில் காவ்யா தனது வளைகாப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி பெற்றோர்களும் காவ்யாவிடம் வளைகாப்புக்கு வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சேலத்தில் காவ்யாவுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில் காவ்யாவின் பெற்றோரும் சேலத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கினர். பின்னர் மகளுக்கு போன் செய்து சேலம் வந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்து காவ்யாவின் பெற்றோர் முதன்முறையாக சேலம் வந்துள்ளதால், காவ்யா தனது கணவரிடம் நேரில் சென்று பெற்றோரை அழைத்து வந்து விடலாம் என்று கூறியுள்ளார். இரவு நேரமாகி விட்டாலும் காதல் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக காவ்யாவை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார் தனுஷ். நள்ளிரவு 12 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலம் தரையிறங்கும் இடத்தில் காவ்யா திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
அவர்கள் சென்ற பைக் சக்கரத்தில் காவ்யாவின் துப்பட்டா சிக்கி கீழே விழுந்துள்ளார். இதில் காவ்யாவுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவ்யாவின் உடலை பார்த்து காவ்யாவின் கணவர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மகளின் வளைகாப்புக்கு வந்திருந்த பெற்றோர், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி அவர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது.