இன்று அன்னதோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேகம்... இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!!
Dinamaalai November 15, 2024 01:48 PM

இன்று ஐப்பசி மாத பெளர்ணமி. ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் தான் சிவனுக்கு செய்கின்ற அன்னாபிஷேகம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. ஏழெழு தலைமுறைக்கும் அன்னதோஷத்தைப் போக்கும் சக்தி படைத்தது இந்த அன்னாபிஷேகம். ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு என்றால், ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகம் விசேஷமானது. இன்று தமிழகம் முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

இன்றைய வாழ்க்கை முறையில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில், “சாதத்தை உங்க கண்ணிலேயே காட்டாதீங்க.. சப்பாத்தி... ஓட்ஸ் கஞ்சி” என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இன்னும் சிலருக்கு உணவை கண்டாலே வெறுப்பு. இத்தகையோரில் பலரும் அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல... நாம் அனைவருமே இன்றைய தினம் நவம்பர் 15ம் தேதி ஐப்பசி பெளர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவ தரிசனம் செய்வது சிறப்பு.  

இதனால் அன்னதோஷம், அன்ன துவேஷத்தினால் பாதிக்கப்பட்டு சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுபவர்கள் நிலை படிப்படியாக மாறத் தொடங்கும். அன்னதோஷம் பீடித்தால் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் வீட்டில் தங்காது. உணவு இருந்தாலும் ஒரு வாய் கூட அமைதியாக அமர்ந்து ருசித்து  சாப்பிட முடியாது. இதனை களைய அன்னபூரணி விரதம் இருந்து பசியென்று வருபவர்களுக்கு உணவு அளிக்கலாம். 

ஜோதிட சாஸ்திரத்தில் அன்னம் எனப்படும் உணவிற்கான காரக கிரகம் சந்திரன். சுவையான உணவுக்கு காரகர் சுக்கிரன். உணவை வீணாக்காதீர்கள். உணவு தோஷம் யாரை பாதிக்கும் பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் , பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும். வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிட விடாமல் தடுப்பவர்களையும் அன்னதோஷம் பீடிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

உணவை  குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும்  பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களைவும் அன்னதோஷம் பீடிக்கும். இன்றைய தினத்தில் சிவ ஆலயங்களில் பச்சரிசி வாங்கி கொடுப்பதுடன் 5 பேருக்கு அன்னதானமும் செய்யலாம். பாவங்களை நீங்கும் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்போம். பஞ்சமில்லா வாழ்வு பெறுவோம். 
ஓம் நமசிவாய!!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.