Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின் பின்னணி என்ன?
Vikatan November 15, 2024 08:48 PM

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராகுல் காந்தி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவில் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் நாண்டெட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ''தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தைப் பெற உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்ப்பதில் கெளதம் அதானி முக்கிய பங்கு வகித்தார். உங்களது அரசு திருடப்பட்டது. பிடுங்கப்பட்டது. இதில் நரேந்திர மோடிக்குத் தொடர்பு இல்லை என்று நினைக்கிறீர்களா? அரசியல் கூட்டத்தில் அதானி ஏன் பங்கேற்க வேண்டும்? அதானி திட்டத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அதானி டெல்லியில் நடந்த அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடி ரூ.1 கோடி மதிப்பிலான தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார். அதோடு தொழிலதிபர்கள் வாங்கிய 16 லட்சம் கோடி கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்.

நான் தேர்தல் பிரசாரத்தில் சிவப்பு கலர் காலி அரசியல் சாசன நகலை வைத்திருப்பதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். புத்தகத்திற்குள் எதுவும் இல்லை என்று சொல்கிறார். புத்தகத்தின் நிறம் முக்கியம் இல்லை என்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நமது பிரதமர் இந்திய அரசியலமைப்பைப் படிக்காததால் புத்தகம் காலியாக இருப்பதாக நினைக்கிறார். அவர் இந்திய அரசியல் சாசனத்தை ஒருபோதும் படிக்காததால் அதில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. இந்தப் புத்தகம் மோடிக்கு காலியாக இருக்கலாம், ஆனால் அதில் பிர்சா முண்டா, கௌதம புத்தர், டாக்டர் பீமாராவ் அம்பேத்கர், மகாத்மா பூலே மற்றும் மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்களின் எண்ணங்கள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஆன்மா என்பதைப் பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும். புத்தகம் காலியாக உள்ளது என்று கூறுவதன் மூலம் சிறந்த தலைவர்களைப் பிரதமர் மோடி அவமதிக்கிறார்.

மகாராஷ்டிராவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் இரு மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலானது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், அரசியலமைப்பின் அடிப்படையில் நாட்டை ஆளுவதும் ஆகும். தற்போதைய ஆளும் ஆட்சிக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை. பழங்குடியின மக்களை பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் வனவாசிகள் என்று கூறுகின்றன. பழங்குடியின மக்கள்தான் நீர், வனம், நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள்''என்று தெரிவித்தார்.

பிரசாரத்தில் ராகுல் காந்தி

நாண்டெட்டில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு விமான நிலையம் நோக்கிச் சென்றபோது வழியில் பேருந்து நிலையம் வந்தது. உடனே பேருந்து நிலையத்திற்குள் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்த பெண் பயணிகளுடன் கலந்துரையாடினார். அதோடு அங்கிருந்த கரும்பு ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்தார். அதோடு தனது பாதுகாவலர்களுக்கும் ஜூஸ் வாங்கிக்கொடுத்தார். அதற்குப் பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.