இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியின் 90வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பிளேர்’ பிரிவில் கோவா, அருணாச்சல பிரதேச அணிகள் மோதும் ஆட்டம் கோவாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அருணாச்சல பிரதேசம் 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவா தரப்பில் நபம் தாகன் அபோ 25 ரன்கள் அடிக்க, கோவா அணி சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸை ஆடிய கோவா 92 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 727 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக காஷ்யப் பாக்லே 300 ரன்களும், சினேஹால் கவுதங்கர் 314 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 606 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் 90 வருட ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு 600 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்ட முதல் ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் 2016-17ல் டெல்லிக்கு எதிராக மராத்தியின் ஸ்வப்னில் குகலே மற்றும் அங்கித் பாவ்னே ஆகியோர் 594 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அதை முறியடித்துள்ள காஷ்யப் பாக்லே - சினேகல் கவுதங்கர் புதிய சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து, 643 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அருணாச்சல பிரதேச அணி, கோவா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 22.3 ஓவரில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் கோவா 551 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.